தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தம்) பணிகளை தடுக்கும் நோக்கில், அரசு ஊழியர்களை மறைமுகமாக ஈடுபட வேண்டாமென தூண்டப்படுவதாக கூறி, தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடுமையாக சாடியுள்ளார்.
தான் வெளியிட்ட அறிக்கையில், அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியலை சுத்திகரிக்கும் சிறப்பு தீவிர நடவடிக்கை நடைப்பெறுகிறது. இதன் மூலம் போலி வாக்காளர்களை நீக்கி, தகுதியுள்ளவர்களை பட்டியலில் சேர்ப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். ஆனால், இந்நடவடிக்கையைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
பிஹார் தேர்தல் முடிவுகளைப் பார்த்தும் முதல்வர் இந்த பொய்ப்பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
நான்கு ஆண்டுகளாக திமுக பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களை சேர்த்திருப்பதால், தற்போது நடைபெறும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு ஆட்சியாளர் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஒருபுறம் திமுக இந்த வேலைகளை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் எஸ்.ஐ.ஆர். பொறுப்பைப் பெற வேண்டிய அரசு ஊழியர்களுக்குப் பதிலாக திமுகவினரே வீடு வீடாக படிவங்களை வழங்கி வருவதாக பிரசாத் குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆதரவாளர்களுக்கே முதன்மையாக படிவங்கள் வழங்கப்படுவதாலும், பிறருக்கு சிரமம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், வருவாய்த் துறை ஊழியர் சங்கங்கள் நவம்பர் 18 முதல் எஸ்.ஐ.ஆர் பணிகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, தேர்தல் ஆணையத்துக்கு மறைமுக மிரட்டல் விடுப்பதற்குச் சமம் எனவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் அரசியல் சார்பின்றி பணிபுரிய வேண்டிய நிலையில், திமுக அரசு அவர்களை பயன்படுத்தி அரசியல் நலன் தேடுவதாக அவர் கடுமையாக கண்டித்தார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், போலி வாக்காளர்கள் அற்ற மாநிலமாக தமிழகம் மாற அரசு முழுமையாக எஸ்.ஐ.ஆரை ஆதரிக்க வேண்டும் என்பதையும் பிரசாத் வலியுறுத்தினார்.