வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது நடந்த மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கும் நிலையில், தன்னை குற்றவாளியாகக் குற்றம் சாட்டுவது உண்மையல்ல என்றும், இதை பற்றி அவர் கவலைப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தீர்ப்புக்கு முன்பு தனது ஆதரவாளர்களுக்கு பகிர்ந்த ஆடியோ செய்தியில் ஹசீனா கூறியது:
“அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட அவாமி லீக் கட்சி எளிதில் வீழ்ச்சியடையாது. எங்கள் தொண்டர்கள் எங்களுக்கு முழுமையான ஆதரவு தருகிறார்கள்.
ஊழல்வாதி, அடக்குமுறையாளர், கொலைவாதி யூனுஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மக்கள் மூலம் தக்க பாடம் கற்பிக்கப்படுவார்கள். நீதியின் மூலம் தீர்வு கிடைக்கும்.
நான் உயிருடன் இருக்கிறேன், மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் பணியாற்றுவேன். கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தில் அவர்கள் சில கோரிக்கைகளை ஏற்றேன், ஆனால் தொடர்ந்து புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நான் 10 லட்சம் ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளேன். அதை வைத்து என்னை மனித உரிமை மீறியதாக குற்றம் சாட்டுகிறார்களா? அவர்களால் எவ்வளவு தீர்ப்பு வேண்டுமானாலும் வழங்கட்டும். எனக்கு அதில் கவலை இல்லை. இது இறைவன் கொடுத்த உயிர்; அதை அவர் எடுத்துக்கொள்ளவேண்டும். என் நாட்டிற்காக நான் தொடர்ந்து செயல்படுவேன். என் பெற்றோர்களையும் உடன்பிறப்புகளையும் இழந்தேன், வீட்டும் எரிக்கப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் பின்னர் ஷேக் ஹசீனா பதவியை இழந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். மாணவர்கள் அமைப்பில் நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.