மெட்ரோ சேவைக்கு பயணிகள் 5-ல் 4.3 மதிப்பெண்: ‘கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ்’ ஆய்வில் வெளிப்படை
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் குறித்து நடைபெற்ற சர்வதேச அளவிலான ஆய்வில், பயணிகள் திருப்தி மதிப்பெண் 5-ல் 4.3 எனப் பெற்றுள்ளதாக ‘கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ்’ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ்’ (Community of Metros) என்பது உலக நகரங்களில் இயங்கும் மெட்ரோ ரயில்களின் செயல்திறன், தரநிலை, பயணிகள் திருப்தி ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் சர்வதேச அமைப்பாகும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2024ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் புதிய உறுப்பினராக இணைந்தது.
உலகத் தரத்திலான சேவையை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் இணைய வழியாக பயணிகள் திருப்தி கணக்கெடுப்பை நடத்தியது. இதில் சுமார் 6,500 பயணிகள் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்தனர். சேவை தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு, அணுகல் வசதி, கிடைக்கும் தன்மை போன்ற அம்சங்கள் அடிப்படையாக மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ ரயில் நிறுவனங்கள் பங்கேற்றன. முடிவில், சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், பயணிகள் திருப்தியில் முன்னணி இடம் பெற்றதாகவும், ஒட்டுமொத்த மதிப்பெண் 5-ல் 4.3 எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை விவரப்படி — கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 64% ஆண்கள், 33% பெண்கள், மற்றும் 3% மற்றவர்கள் ஆவர். பெரும்பாலானோர் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள்; இவர்கள் பெரும்பாலும் பணி நிமித்தமாக மெட்ரோ சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
பயணிகள், கட்டண முறைகள், நிலைய இணைப்பு வசதி, கூடுதல் இருக்கை வசதி, மற்றும் நிலைய அணுகல் வசதி போன்ற துறைகளில் மேலும் மேம்பாடுகள் தேவை என கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்ததாவது:
“பயணிகளின் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் தொடர்ச்சியான மேம்பாடுகளை மேற்கொள்ள உறுதியாக உள்ளோம்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.