டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஐ20 காரை வாங்கிய அமீர் ரஷித் அலி என்ற நபரை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) கைது செய்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் நபி நடத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரை வாங்கியவர் கைது
என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில்,
- குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஐ20 கார் அமீர் ரஷித் அலி பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும்,
- ஜம்முவின் சம்போரா பகுதியை சேர்ந்த இவரே டெல்லிக்கு வந்து காரை வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அமீர் ரஷித் அலி மற்றும் மருத்துவர் உமர் நபி இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணை வேகம்
இந்த வழக்கில் இதுவரை 73 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. அதேசமயம் டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரபிரதேச போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
34 சந்தேக வாகனங்கள் பறிமுதல்
ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு, டெல்லியைப் போன்றே நாடு முழுவதும் வாகனங்களை பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வருகின்றனர். டெல்லியில் மட்டும் 34 சந்தேகத்துக்குரிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெடிகுண்டு சோதனை ஆய்வகம் கண்டுபிடிப்பு
கார் குண்டுவெடிப்பை நடத்திய உமர் நபி, பரிதாபாத்தில் தங்கியிருந்த வீட்டில் ரகசிய ஆய்வகத்தை அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் வெடிபொருள் சோதனைகள் நடத்தியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.