தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அந்தப் படிவங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டவை என எழுத்து மூலம் உறுதி அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
- தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பிஎல்ஓ-க்கள் (BLO) எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, பூர்த்தியடைந்த படிவங்களை மீண்டும் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இந்த பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிஎல்ஏக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
- இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் வரை, தினசரி அதிகபட்சம் 50 எஸ்ஐஆர் படிவங்களை பிஎல்ஏக்கள் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உறுதிமொழி அவசியம்
படிவங்களை அளிக்கும் போது பிஎல்ஏக்கள் கீழ்கண்டவாறு உறுதி மொழி வழங்க வேண்டும்:
“என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பொறுப்புப் பகுதிக்கான வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டுள்ளது. தவறான தகவல் வழங்குவது மக்கள் பிரதிநித்துவ சட்டம், 1950 – பிரிவு 31ப்படி தண்டனைக்குரியதாகும் என்பதை நான் அறிவேன்.”
அடுத்தடுத்த நடைமுறைகள்
- பெறப்பட்ட படிவங்களை பிஎல்ஓக்கள் சரிபார்த்து, டிஜிட்டல் வடிவமாக வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்புவார்கள்.
- அதன் பின், வாக்காளர் பதிவு அலுவலர் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.