காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தாரா என்ற சர்ச்சைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“சபரிமலை பக்தர்கள் இருமுடியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் பாஜக இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக தவெக நடத்திய போராட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.
விஜய்–ராகுல் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டபோது அவர்,
“நான் தமிழக காங்கிரஸ் தலைவர். இந்த சந்திப்பு குறித்து எனக்குத் தகவல் எதுவும் இல்லை. உறுதிப்படுத்தப்படாத செய்திகளை சிலர் பரப்பி தங்களுக்குப் புகழ் தேடுகிறார்கள். நேற்று நான் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கேட்டபோதும், அவருக்கும் இதுபற்றி தெரியவில்லை என்று கூறினார். வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மையற்றவை.
எங்கள் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பதே அதிகாரப்பூர்வமானது. கூட்டணிகள் குறித்து முடிவு செய்வது அகில இந்திய காங்கிரஸ் தலைமையே” என்றார்.