எஸ்ஐஆர் பணியின் ஒரு பகுதியாக வாக்காளர் படிவங்கள் வழங்கும் செயல்முறை நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாநகரில் படிவங்கள் அனைவருக்கும் சென்றடையாதது குறித்து அரசியல் கட்சிகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கவலை தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் பல்வேறு பகுதிகளில் எஸ்ஐஆர் பணிகளை முன்னெடுத்து வருகிறது. எனினும் திருப்பூரில் பல இடங்களில் படிவங்கள் முழுமையாக விநியோகமாகவில்லை என பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
திருப்பூர் சுண்டமேட்டைச் சேர்ந்த வடிவேல் கூறுகையில்,
“திருப்பூரில் தொழிலாளர்கள் பெரும்பாலும் பகலில் வேலைக்கு சென்றுவிடுகின்றனர். பலரும் வாடகை வீடுகளில் வாழ்பவர்கள். வேலை, வீடு மாற்றம் அடிக்கடி நடப்பதால், ஆதார், கியாஸ், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றில் தலா வேறு முகவரிகள் இருக்கிறது. இருந்தாலும் குடும்ப அட்டையில் உள்ள முகவரிக்கு தானே நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்கிச் செல்கிறார்கள். வேலைகள் மற்றும் வாடகை வீடுகள் அடிக்கடி மாறுவதாலும் மக்கள் முகவரி மாற்றத்தை முக்கியமாக எடுத்துக் கொள்ளுவதில்லை” என்றார்.
ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூறுகையில்,
“திருப்பூர் மாநகரின் வடக்கு, தெற்கு தொகுதிகளில் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், முன்னரிருந்த பணியாளர்களுடன் கூடுதலாக ஆசிரியர்களையும் களத்தில் ஈடுபடுத்த உத்தரவு வந்துள்ளது. எஸ்ஐஆர் பணி அதிகரித்ததால், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளும் தொழில்நகர் ஆகிய திருப்பூரில் சிக்கலாக மாறுகிறது. பல வீடுகள் பகலில் பூட்டப்பட்டிருப்பதால், அதிகாரிகள் முழுமையாக வீடுகளை சரிபார்க்க முடியாத நிலை. பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், கூடுதலாக அவர்களைப்பணிக்கு அனுப்புவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என கவலை தெரிவித்தார்.
திருப்பூர் அரசியல் கட்சி நிர்வாகிகள் கூறுகையில்,
“வாக்குச்சாவடி மட்டத்தில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று படிவங்கள் வழங்க வேண்டிய நிலையில், சில பகுதிகளில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வாக்காளர்கள் தங்களே வந்து வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதிலும் இடத்துக்கு இடம் ஒரே ஒரு படிவம் மட்டும் வழங்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கத் தெரியாத, தேர்தல் நடைமுறைகள் பற்றிய அறிவில்லாத ஒப்பந்த ஊழியர்கள் இப்பணிக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றாலும் பெரும்பாலும் எடுக்கவில்லை. இளம் வாக்காளர்களிடம் தவறான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.
இதனை சரி செய்ய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலையிட்டு, படிவ விநியோகத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.