அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிமுறைகளை மீறி அங்கீகாரம் வழங்கியதாக, பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேருக்கு லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் முன்வைத்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பல்கலைக்கழகம் அமைத்த 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு பரிசோதனையில், பேராசிரியர் எஸ். மாரிச்சாமி 11 கல்லூரிகளில் வேலை செய்கிறார் என ஆவணங்கள் காட்டப்பட்டதும், ஒரே நாளில் இரு கல்லூரிகளை ஆய்வு செய்தபோது பேராசிரியர் ஒய். ரவிக்குமார் இரண்டு இடங்களிலும் பணியில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
விசாரணையில், இந்த முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும், உரிய ஆய்வு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் தெரியவந்தது.
இதன் அடிப்படையில், முன்னாள் மற்றும் தற்போதைய இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், பதிவாளர்கள் உள்ளிட்ட 10 அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் எஸ்.மாரிச்சாமி, எஸ்.கண்ணன், ஒய்.ரவிக்குமார் ஆகியோர், மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை பகுதிகளைச் சேர்ந்த நான்கு தனியார் கல்லூரிகள் என மொத்தம் 17 பேருக்கு எதிராக லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முறைகேடாக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிக்கும் நிலையில், இதுகுறித்து விரிவான புலனாய்வு நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.