மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைவுசெய்யப்பட்ட பணிகளுக்கான ரூ.1,251.39 கோடி ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டிற்கான திட்டத்தில் தமிழகத்துக்கு 12 கோடி மனித வேலைநாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை விட மிகக் குறைவு. ஆட்சிக்கு வரும் முன், தமிழக மக்களுக்கு 150 நாள் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதற்கு எந்தவித எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை.
மேலும், திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான நிலுவை ஊதியத்தைப் பெற்றுத்தருவது, மாநில அரசின் அடிப்படை பொறுப்பாகும். எனவே, ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய நிலுவை ஊதியத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரும் நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.