ராஜபாளையம் பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்ற கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அதை அமல்படுத்த வேண்டாம் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்த தியானபீட அறங்காவலர் சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில், ராஜபாளையம் அருகே சேத்தூர், கோதைநாச்சியாபுரம் பகுதிகளில் மருத்துவர் கணேசனின் சொந்த நிலங்களில் ஆசிரமங்கள் செயல்பட்டு வந்ததாகவும், அங்கிருந்த பெண் சீடர்களை வெளியேற்ற கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்ததையும், டிஎஸ்பி அதை நிறைவேற்ற முயல்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிரான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ஆசிரமங்களில் இருந்து யாரையும் வெளியேற்ற முடியாது என மனுதாரர் வாதிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி, கோட்டாட்சியரின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்து, சீடர்களை ஆசிரமங்களில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உத்தரவிட்டார்.