திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் இன்று (நவம்பர் 13) காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி–சென்னை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் அருகே உள்ள சஞ்சீவி நகர் பகுதி, ஏழு திசைகளிலிருந்து வாகனங்கள் இணையும் நெரிசலான சாலைச் சந்திப்பாக உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் பெரும்பாலான வாகன ஓட்டிகளால் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் தினசரி விபத்துகள் நிகழ்ந்து, பலர் காயமடைந்ததோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் விவசாய மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இப்பகுதியை கடக்க வேண்டியிருப்பதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி, சர்க்கார் பாளையம் – கல்லணை சாலை பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை சஞ்சீவி நகர் சிக்னலில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திருச்சி கிழக்கு தாசில்தார் விக்னேஸ்வரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவி பொறியாளர் அசோக் குமார் ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள், “நான்கு மாதங்களுக்குள் சுரங்கப்பாதை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்படும்” என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.
இதற்கிடையில், சாலை மறியல் நடைபெறுவதற்கு முன்பு, சஞ்சீவி நகர் சிக்னலில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் ஒரு லாரி ஓட்டுநரின் கால் முறிந்தது. அவர் அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் சஞ்சீவி நகர் சிக்னல் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் பாதுகாப்பு பிரச்சினையை மீண்டும் வெளிச்சமிட்டுள்ளது.