மதுரை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மேலூர் அருகே சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அனஞ்சியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் மதுரை நோக்கி திரும்பியபோது, சக்குடி அருகே எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் அவர்கள் சென்ற வாகனத்தை மோதியது.
இவ்விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பூவந்தி போலீஸார் உடல்களை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிந்தபின்னும், உறவினர்கள் உடல்களை பெற மறுத்து, மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள்,
- விபத்துக்குக் காரணமான 5 காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்,
- பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் சமரசம் ஏற்படவில்லை. இதனால் உறவினர்கள் உடலைப் பெறாமல் அங்கிருந்து சென்றனர்.
சத்யாவின் சகோதரி மங்கையர்க்கரசி கூறியதாவது:
“காவல்துறையினர் தவறான பாதையில் வந்ததால் விபத்து நடந்தது. அவர்கள் போதையில் இருந்ததால் மூவரும் உயிரிழந்தனர். அதற்காக அவர்களை பணி நீக்கம் செய்யவும், குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவும் வேண்டும்,” என தெரிவித்தார்.