ஆப்கனிஸ்தானில் 10 குடும்பங்களில் 9 பசி மற்றும் கடனில் வாடுகின்றன – ஐ.நா. அறிக்கை
ஆப்கனிஸ்தானில் பெரும்பாலான குடும்பங்கள் பசியும், கடன்சுமையுமாக வாழ்ந்து வருகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு திட்டம் (UNDP) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
அந்த அறிக்கையின் படி, சமீப காலமாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற அண்டை நாடுகளில் வாழ்ந்த ஆப்கானியர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 23 லட்சம் பேர் ஆப்கனிஸ்தானுக்கு மீளச் சென்றுள்ளனர். இந்நிலையில், நாட்டின் பல மாகாணங்களைச் சேர்ந்த 49,000 குடும்பங்களிடமும், அதில் 1,500 பேர் திரும்பிய குடும்பங்களிடமும், ஐ.நா. மேம்பாட்டு திட்டம் ஆய்வு நடத்தியது.
அதில், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குடிநீர், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் இவற்றில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ஆய்வில், ஆப்கனிஸ்தானில் 10 குடும்பங்களில் 9 குடும்பங்கள் பசியை சமாளிக்க உணவு அளவை குறைப்பது, தங்களின் சொத்துகளை விற்பது, கடன் வாங்குவது போன்ற கடினமான வழிகளைத் தேர்ந்தெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டுக்குள் வாழும் குடும்பங்களில் 81%, வெளிநாட்டில் இருந்து திரும்பிய குடும்பங்களில் 88% பேர் கடனில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், நங்கர்ஹார், குனார், சமங்கன் ஆகிய மாகாணங்களில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளன. குடும்பத் தலைவர் இல்லாத பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், பெண்களுக்கு வேலை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இக்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்றும் ஐ.நா. உயர் அதிகாரி கன்னி வக்னராஜா தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து கிழக்கு, வடக்கு, மத்திய ஆப்கனிஸ்தானில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் மின்சாரம், சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.