முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும், சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்மானித்துள்ளது.
மதுரையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குழந்தை இல்லை. அவரது சகோதரருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். சமீபத்தில் அந்த சகோதரர் இறந்துவிட்டதால், அவரது எட்டு வயது மகனை தத்தெடுக்க மனுதாரர் விருப்பம் தெரிவித்தார். குழந்தையின் தாயாரும் இதற்கு சம்மதம் அளித்தார்.
இதையடுத்து, தத்தெடுப்பு பத்திரத்தை பதிவு செய்ய மேலூர் கிழக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் அவர் விண்ணப்பித்தார். ஆனால் “முஸ்லிம் மதத்தில் தத்தெடுப்பு அனுமதிக்கப்படாது” என்று கூறி சார் பதிவாளர் விண்ணப்பத்தை நிராகரித்தார்.
அதை எதிர்த்து, தன் தத்தெடுப்பு பத்திரத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவில் கூறியதாவது:
“இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தத்தெடுப்பை மத ரீதியாக அங்கீகரிக்காவிட்டாலும், அந்த மதத்தினரும் சிறுவர் நீதிச் சட்டம் 2015ன் கீழ் தத்தெடுப்புக்கான நடைமுறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்கலாம்.”
அவரது உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது:
- தத்தெடுப்பு, குழந்தையின் இயற்கை பெற்றோரின் எழுத்து சம்மதத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- தத்தெடுக்க விரும்புவோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும்.
- விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட 3 வாரங்களுக்குள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க வேண்டும்.
- மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை 3 வாரங்களில் தீர்க்க வேண்டும்.
- தத்தெடுப்புக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி வழங்கப்பட்டால், அதைப் பதிவு செய்ய தேவையில்லை.
நீதிபதி மேலும் குறிப்பிட்டார்:
சமீப காலங்களில் தத்தெடுப்பு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. ‘தி இந்து’ நாளிதழில் “இந்தியா அதன் தத்தெடுப்பு நடைமுறைகளை தளர்த்த வேண்டுமா?” என்ற தலைப்பில் இதுதொடர்பான கட்டுரை வந்தது. குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த தத்தெடுப்பு முக்கிய பங்காற்றுகிறது. எனவே, அதிகாரிகள் சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் தத்தெடுப்பு நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.