ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டது அம்பலம்

ராஜஸ்தானில் நேற்று முன்தினம் நடந்த பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. புத்தம் புதிய அந்த தனியார் பேருந்தில் விதிகளை மீறி மாற்றங்கள் செய்யப்பட்டதே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ஜெய்சால்மரிலிருந்து நேற்று முன்தினம் பிற்பகலில் 57 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோத்பூர் புறப்பட்டு சென்ற தனியார் பேருந்து தையாத் கிராமத்துக்கு அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், 21 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த நிலையில், புத்தம் புதிதாக வாங்கப்பட்ட அந்தப் பேருந்தில் விதிகளை மீறி இஷ்டம்போல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் வெளியேறும் வழி இல்லாமல் இருந்துள்ளது. இரண்டு கதவுகள் இல்லாத அந்த பேருந்தில் தீப்பற்றியவுடன் பயணிகள் அனைவரும் ஒரே கதவு வழியாக முண்டியத்துக்கொண்டு வெளியேற முயன்றுள்ளனர். அந்த வழியும் மிகவும் குறுகலாக இருந்துள்ளது. இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில பயணிகள் தீயிலிருந்து தப்பிக்க ஜன்னலை உடைத்து குதித்துள்ளனர். அக்கப்பக்கத்தினர் ஓடிவந்து மீட்பதற்குள் சில நிமிடங்களில் பெரும்பாலான பயணிகள் தீயில் சிக்கிக் கொண்டனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டது. இதையடுத்து, டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

பேருந்தின் பின்பக்க பகுதியில் தீப்பிடித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், உண்மையான காரணம் என்ன என்பதை தடயவியல் சோதனை மூலம் உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கோர சம்பவத்தை நான் பார்த்ததில்லை. இறந்த பயணிகளை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படும்” என்று ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சார் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box