புரன் குமார் ஐபிஎஸ் தற்கொலை வழக்கு – தேசம் முழுவதும் கவனம் ஈர்த்த மர்மம்
பிரபலங்கள் அல்லது உயர்மட்ட அதிகாரிகள் தற்கொலை செய்வது செய்தியளவில் புதிய விஷயமல்ல. ஆனால், ஒரு அதிகாரி தற்கொலை வழக்கில் தொடர்ச்சியாக நிகழும் அதிர்ச்சித் திருப்பங்களும், அதன் மூலம் அரசியல் வட்டாரங்களில் எழும் சர்ச்சைகளும், அரசாங்கம் நடத்திய சமரச முயற்சிகளும், முக்கிய அரசியல்வாதிகள் முன்வைக்கும் கேள்விகளும் — இந்த வழக்கை தேசம் முழுவதும் கவனிக்கத் தூண்டியுள்ளன. புரன் குமார் சம்பவமும் அதற்கே ஒரு உதாரணம்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து கூறியதாவது:
“புரன் குமாரின் மரணம் ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல; இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தலித் சகோதர, சகோதரிகளுக்கு மிகக் கடுமையான செய்தியை அனுப்புகிறது. நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், தலித்தாக இருந்தால் உங்களை அடக்கலாம், மிதிக்கலாம், அழிக்கலாம் என்பதே அந்த செய்தி” என்றார்.
சம்பவம் நடந்தது எப்படி?
ஹரியானாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் (2001 பேட்ச்), அக்டோபர் 7-ம் தேதி சண்டிகர் நகரின் செக்டர் 11-ல் உள்ள இல்லத்தில் துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டார். அவர் அப்போது ஏடிஜிபி பதவியில் இருந்தார்.
தற்கொலையுக்கு முன், புரன் குமார் எட்டு பக்கங்கள் கொண்ட தற்கொலை குறிப்பு ஒன்றை தட்டச்சு செய்து கையொப்பமிட்டிருந்தார். அதில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் முதல் சில உயரதிகாரிகள் சாதிப் பாகுபாடு காட்டி தன்னை மன ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட அவமானங்களை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவர் காவல் பயிற்சி அகாடமியில் பணியாற்றி வந்தார். காவல் துறையினரின் உரிமைகள் மற்றும் பதவி உயர்வு சமநீதி குறித்து தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புரன் குமாரின் மனைவி அம்னீத் பி. குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்புத் துறையில் ஆணையர் மற்றும் செயலாளராக பணியாற்றுகிறார். கணவன் தற்கொலையால் உயிரிழந்த நிலையில், மனைவி தற்போது நீதிக்காக போராடி வருகிறார்.
முதல் தகவல் அறிக்கை மற்றும் சிக்கல்கள்
தற்கொலையின் பின்னர் புரன் குமாரின் உடல் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநில அரசு, அவரது குடும்பத்தாருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டது. அவரின் மகளுக்கு டிஎஸ்பி பதவி வழங்கும் முன்மொழிவும் வந்தது.
ஆனால், “சமரசம் வேண்டாம்; டிஜிபி ஷத்ருஜித் கபூர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என புரன் குமாரின் மனைவி வலியுறுத்தி வருகிறார்.
முதல்தடவையில் எஃப்ஐஆர் முழுமையற்றதாக இருந்ததால், பல போராட்டங்களின் பின்னர் தான் அதில் திருத்தங்கள் செய்யப்பட்டன. புரன் குமாரின் தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அதிகாரிகளின் பெயர்களும் சேர்க்கப்பட வேண்டும் என அம்னீத் குமார் கோரிக்கை வைத்தார்.
அவரின் முயற்சிக்குப் பின்னரே அக்டோபர் 10 அன்று எஃப்ஐஆர் திருத்தப்பட்டது. தற்போது சண்டிகர் ஐஜி புஷ்பேந்திர குமார் தலைமையில் ஆறு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. எஸ்சி/எஸ்டி சட்டத்தின் பிரிவு 3 (1998) சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி செய்தார்.
திடீர் திருப்பம்
இதற்கிடையில், புரன் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ஏஎஸ்ஐ சந்தீப் குமார் லத்தார் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை குறிப்பு மற்றும் வீடியோவில் “புரன் குமார் ஊழல் அதிகாரி” என்று குறிப்பிட்டிருந்தார். ஒரே மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு காவல் அதிகாரிகள் தற்கொலை செய்தது வழக்கை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இந்த நிலைமையில் மாநில டிஜிபி ஷத்ருஜித் கபூர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்; ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜார்னியா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால், “இவர்கள் கைது செய்யப்படாமல் பிரேதப் பரிசோதனை நடக்காது” என புரன் குமாரின் மனைவி பிடிவாதமாக கூறி வருகிறார்.
புரன் குமாரின் லேப்டாப்பில் முக்கிய ஆதாரங்கள் உள்ளன என காவல்துறை கருதுகிறது. அதை ஒப்படைக்குமாறு மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் இதுவரை ஒப்படைக்கவில்லை.
மாநில அரசு மற்றும் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதற்காக நாடு முழுவதும் கண்கள் இவ்வழக்கை நோக்கி உள்ளன.