கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று வெற்றி பெற்றது.
கிருஷ்ணகிரி நகராட்சி பொதுக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இரண்டரை மணி நேரம் நீண்ட விவாதம் நடைபெற்றது.
பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர்கள் 21 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேர், மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 27 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வாக்கெடுப்பு முடிவுகளை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் அறிவித்தார். அவர் கூறியதாவது:
“மொத்தம் 27 கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படுகிறது. இது குறித்து அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும். புதிய தலைவர் தேர்வு நடைபெறும் தேதியை அரசு பின்னர் அறிவிக்கும்,” என்றார்.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் நாகஜோதி கூறியதாவது:
“33 வார்டுகளின் வளர்ச்சிக்காகத்தான் நான் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன். என்னை யாரும் கடத்தவில்லை. வார்டு மக்களின் நலனே எனக்குப் பிரதானம்,” என தெரிவித்தார்.
கூட்டம் முடிந்ததும், 27 கவுன்சிலர்களும் பேருந்தில் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு முன், அதிமுக கவுன்சிலர் நாகஜோதி போலீஸ் பாதுகாப்புடன் கூட்டத்தில் பங்கேற்க அழைத்து வரப்பட்டார்.