மாணவி பாலியல் வன்கொடுமை புகார்: டெல்லியில் பல்கலை. மாணவர்கள் போராட்டம்
டெல்லியில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததைச் தொடர்ந்து அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி சத்தர்பூரில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழகம் (எஸ்ஏயு) அமைந்துள்ளது. சார்க் நாடுகளால் ஒன்றிணைந்து நடத்தப்படும் இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்திய மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் நிகழும் தவறுகள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதி நிறைந்த எஸ்ஏயு வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவி ஒருவர் 4 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மைதான் கடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாகமும் பேராசிரியர் சஞ்சய் சதுர்வேதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி இக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேராசிரியர்களும் டெல்லி போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து சமாதானப்படுத்தினர். போராட்டம் தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.