தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும் மலைச்சாலைகளில் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சாலைப் பகுதி தெளிவாக தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கேரளாவை நோக்கி செல்லும் முக்கிய மலைச்சாலைகள் — குமுளி, போடிமெட்டு, கம்பம்மெட்டு ஆகியவை. இதோடு, மேகமலை, அடுக்கம், அகமலை போன்ற உள்மாவட்ட மலைப்பகுதிகளிலும் இந்நிலை காணப்படுகிறது.
சமீப நாட்களாக லேசான சாரலுடன் கூடிய மிதமான வெயில் நிலவி வருவதால், மூடுபனி அடர்த்தியாக உருவாகி சாலையின் நீண்ட தூரம் வரை பரவி வருகிறது. இதனால் வாகன ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பலர் பகல் நேரத்திலேயே முன்விளக்குகளை ஒளிரச் செய்து பயணம் செய்து வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“போடிமெட்டு–மூணாறு மலைச்சாலையில் மூடுபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சபரிமலை யாத்திரை சீசன் தொடங்கவுள்ளதால், குமுளி மற்றும் வண்டிப் பெரியாறு வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனுபவமிக்க ஓட்டுநர்களின் வழிநடத்தலில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். வாகன வேகத்தைக் கட்டுப்படுத்தி, பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றனர்.