தெலுங்கு நாயகர்களும் தமிழக திரைகளும்: கிரண் அப்பாவரம் ஆதங்கம்

தமிழகத்தில் தெலுங்கு நாயகர்களுக்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை என கிரண் அப்பாவரம் தெரிவித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நாயகர்களுக்கு அடுத்த வரிசையில் இருப்பவர் கிரண் அப்பாவரம். இவருடைய நடிப்பில் சில படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தீபாவளிக்கு இவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கேரேம்ப்’. இதைத் தொடர்ந்து அளித்த பேட்டியில், தமிழகத்தில் திரையரங்குகள் இல்லாமை குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிரண் அப்பாவரம் பேசியதாவது:

“தெலுங்கு மக்கள் பிற மொழிப் படங்களை ஊக்குவிக்கிறார்கள். சமீபத்தில் ‘லோகா’ படம் பார்க்க திரையரங்குக்கு சென்றேன். முதல் வாரத்தில் இங்கு அரங்குகள் நிரம்பியிருந்தன. இரண்டாம் வாரத்திலும் அதே நிலையில் அரங்குகள் நிரம்பியிருந்தன. தெலுங்கு திரையுலகினரும் நல்ல படங்களை உருவாக்குகிறார்கள். ஆனால், இதர மாநிலங்களில் அப்படி வரவேற்பு கிடைக்கவில்லை.

நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்றே சொல்வார்கள். தெலுங்கு வளர்ந்து வரும் நாயகர்களும் நல்ல படங்களை தயாரிக்கிறார்கள். ஆனால், அது எனக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை. இங்கு முக்கிய 10 தமிழ் நாயகர்களுக்கு நல்ல வர்த்தகம் உள்ளது. அதேபோல், தெலுங்கு நாயகர்களுக்கு தமிழில் நல்ல வர்த்தகம் கிடைக்கிறதா என்றால் இல்லை. ஏன் என்று தெரியவில்லை.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டியூட்’ படத்துக்கு தெலுங்கில் நல்ல திரையரங்குகள் கிடைக்கின்றன. அதேபோல், எனது ‘கேரேம்ப்’ தமிழில் கிடைக்குமா என்றால் இல்லை. ஏன் தமிழகத்தில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என தெரியவில்லை. தெலுங்கு மக்கள் போல அனைத்து தரப்பு படங்களையும் வரவேற்க வேண்டும். இங்கு கிடைக்கும் அன்பு போல, அனைத்து மாநிலங்களிலும் அன்பு கிடைக்க வேண்டும்.

தமிழ் மக்களிடமும் அன்பு கிடைத்தால், அவர்கள் பெரிய இடத்திற்கு அழைத்து சென்றுவிடுவார்கள். அந்த அளவுக்கு அன்பை பகிர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை” என கிரண் அப்பாவரம் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box