“அவர்களின் அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்” – ரோஹித், கோலி குறித்து கம்பீர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கலந்து கொள்கிறார்கள்.
இதனால் ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த சூழலில், அவர்களது அனுபவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். மேலும், அவர்கள் எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்பதையும் கம்பீர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
“உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. இப்போதைய சூழலில் நமது கவனத்தை அதற்காக வைக்கலாம். அவர்கள் இருவரும் தரமான வீரர்கள். அவர்களின் அணிக்குள் வருகை ஆஸ்திரேலிய தொடரில் நமக்கு பலன் தரும். அவர்களுக்கும், இந்திய அணிக்கும் இந்த தொடர் சிறப்பாக அமையும்.
கடந்த 2-3 ஆண்டுகளில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த முறையில் விளையாடி வருகிறது. அணியில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் பல்வேறு ஆட்டங்களை வென்று கொடுத்துள்ளனர். அதையே நாங்கள் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். களத்தில் தங்கள் மேஜிக் அவர்கள் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என கம்பீர் தெரிவித்தார்.