சென்னை மயிலாப்பூரில் செயல்பட்ட ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ நிறுவனத்தில் முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட இயக்குநர் தேவநாதன் யாதவ் மீது மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அதில், 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆனால், தேவநாதன் யாதவ் இதுவரை அந்த தொகையை செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், “நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால் காவல்துறை அவரை கைது செய்யும்” என எச்சரித்தார். மேலும், வழக்கை உடனடியாக பட்டியலிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இதனால், தேவநாதன் யாதவ் மீது மீண்டும் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.