ரூ.94,000-ஐ கடந்த தங்க விலை: பவுனுக்கு ரூ.1,960 உயர்வு
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேவேளை, வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய அளவிற்கு உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரிப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
தங்கத்தின் விலை சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரி, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி, உக்ரைன்-ரஷ்யா போர் போன்ற காரணங்கள் தங்க விலையை அதிரடியாக உயர வைத்துள்ளன.
அக்.7-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.90,400-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு, சில நாட்கள் விலை இறங்கவும், பெரும்பாலான நாட்கள் ஏறவும் இருந்தது. அக்.8-ம் தேதி பவுன் ரூ.91,000-ஐ, அக்.11-ம் தேதி ரூ.92,000-ஐ கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
சென்னையில், நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.92,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று, ஒரு கிராமுக்கு விலை ரூ.245 உயர்ந்து ரூ.11,825-க்கு, பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, 24 காரட் தங்கம் ரூ.1,03,200-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை குறித்தும் அதிரடியாக உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறையில் வெள்ளி தேவையினால், வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206, கட்டி கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து ரூ.2,06,000-க்கு விற்கப்படுகிறது.