உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மேப்பில்ஸ் செயலியை அனைவரும் பயன்படுத்துமாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள்
சுதேசி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “அலுவலகப் பணிகளுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜோஹோ மென்பொருள் சேவை தளத்துக்கு மாறி விட்டேன்” என்று தெரிவித்தார்.
இதன் பிறகு, ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை (chat) செயலியையும் அவர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கினார். தற்போது அடுத்த கட்டமாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மேப்பில்ஸ் (Mappls) என்ற பயண வழிகாட்டி செயலியையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்த செயலியை அனைத்து இந்தியர்களும் பயன்படுத்துமாறு அவர் சமூக வலைதளத்தில் அழைப்பு விடுத்துள்ளார். அதோடு, மேப்பில்ஸ் செயலியைப் பயன்படுத்தி காரில் பயணம் செய்த தனது வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியதற்காக, மேப் மை இந்தியா நிறுவனம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றிய ராகேஷ் மற்றும் ராஷ்மி தம்பதியர் இந்தியாவுக்கு திரும்பி சிஇ இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட் (CE Info Systems Ltd) என்ற நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் அந்த நிறுவனம் மேப் மை இந்தியா (MapmyIndia) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த தம்பதியர், இந்தியா முழுவதும் — சிறிய தெருக்களையும் விடாமல் — ஆய்வு செய்து நாட்டின் டிஜிட்டல் வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.