சக பந்து வீச்சாளர்களை பாராட்டிய வாஷிங்டன் சுந்தர் | IND vs WI டெல்லி டெஸ்ட்

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி பெற இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தனது சக பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:

“இப்படிப்பட்ட மந்தமான பீச்சில் பந்து வீச்சாளர்கள் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நாங்கள் இந்த ஆட்டத்தில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளோம் என்பது ஒரு பெரிய சாதனை. அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசியுள்ளனர். தொடர்ந்து நீண்ட ஸ்பெல்களை வீசி அணிக்கு உதவினர்.

இந்த டெஸ்ட் ஆட்டம் முழுவதும் ஆடுகளம் மெதுவாக இருந்தது. 5 நாட்கள் நீடிக்கும் போட்டிகளில் விளையாடுவது எப்போதும் ஒரு சவால். அதில் முக்கியமானது வீரர்களின் உடல்நிலை மற்றும் ஒருமைப்பாடு. வீரர்கள் ஃபிட்டாகவும் உற்சாகமாகவும் இருந்தால் மட்டுமே இப்படியான கடினமான போட்டிகளை வெல்ல முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மைதானங்களில் நாங்கள் விளையாடுகிறோம். ஒவ்வொரு சூழலும், ஒவ்வொரு அணியும் எங்களை சோதிக்கிறது — இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டின் உண்மையான அழகு. இங்கிலாந்து தொடரில் நாங்கள் 180 முதல் 200 ஓவர்கள் வரை பீல்டில் இருந்தோம்; அது ஒரு பெரிய அனுபவமாகும்,” என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 8 விக்கெட்டுகள், பும்ரா 4, ஜடேஜா 4, சிராஜ் 3, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் எடுத்துள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதற்கு பதிலாக விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனால் பாலோ ஆன் வழங்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனனர்.

இதனால் இந்திய அணிக்கு 121 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 58 ரன்கள் எடுத்து வெற்றி பெற வேண்டியுள்ளது.

Facebook Comments Box