ஒரே நாளில் ரூ.1,480 உயர்வு: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91,000 தாண்டியது
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
செப்.6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80,040 ஆக இருந்தது, அது செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. அமெரிக்க அரசு எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தன. இதன்பிறகு சில நாட்கள் விலை குறைந்தாலும், பின்னர் மீண்டும் அதிகரித்தது. கடந்த 7-ம் தேதி பவுன் விலை ரூ.89,000 தாண்டியது.
இதனால், சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது, மாலையில் ரூ.680 உயர்ந்தது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.185 உயர்ந்து ரூ.11,385-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.99,360 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.170 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து ரூ.1.70 லட்சமாகவும் இருந்தது.