ரூ.4,155 கோடியில் மார்லெட் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்: மோடி முன்னிலையில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கையெழுத்து
இந்தியா வந்திருந்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து உரையாடினர். அந்த நேரத்தில், இங்கிலாந்திலிருந்து ரூ.4,155 கோடியில் மார்லெட் ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் மும்பை வந்தார். அவருடன் 125 பேர் கொண்ட குழுவும் இந்தியா வந்தது. இதையடுத்து, மும்பை மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில், கீர் ஸ்டார்மரும் பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரூ.4,155 கோடி மதிப்பிலான இங்கிலாந்து ஏவுகணைகள் வாங்குதல் உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில்,
“இங்கிலாந்திலிருந்து மார்லெட் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இந்திய வான்வழி பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும். சுயசார்பு இந்தியா (Atmanirbhar Bharat) திட்டத்தின் கீழ், இது பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த ஒப்பந்தம் வடக்கு அயர்லாந்தில் 700 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடற்படை கப்பல்களுக்கான மின்சார இயந்திரங்கள் தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாயின.
சந்திப்பு முடிந்த பின், இரு பிரதமர்களும் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
“இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளைத் தொடங்க உள்ளன. இது இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்தியா–இங்கிலாந்து உறவு, சர்வதேச ஸ்திரத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் வலுவான ஆதாரமாகும்,” என்றார்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்ததாவது:
“இந்தியா மற்றும் இங்கிலாந்து புதிய கூட்டுறவு பாதையை உருவாக்கி வருகின்றன. இது எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை மையமாகக் கொண்ட உறவாக இருக்கும்,” என்றார்.