பிஹார் தேர்தல்: பாஜக, ஜேடியு தலா 101 இடங்களில் போட்டி

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிட உள்ளதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவித்துள்ளது.

243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதன்படி, பிஹார் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும்.

முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 18-ம் தேதி தொடங்குகிறது; இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான மனு தாக்கல் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கும். முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.

தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் பல நாள்களாக நடந்துவந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பங்கீடு இன்று உறுதி செய்யப்பட்டது. இதை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே தனது எக்ஸ் (X) பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதன்படி —

  • பாஜக: 101 இடங்கள்
  • ஐக்கிய ஜனதா தளம் (JDU): 101 இடங்கள்
  • லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்): 29 இடங்கள்
  • ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா: 6 இடங்கள்
  • இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா: 6 இடங்கள்

இது தொடர்பாக வினோத் தாவ்டே, “அனைத்து கூட்டணிக் கட்சிகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் இடப் பங்கீட்டை முடித்துள்ளன. பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆட்சியை அமைக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box