“எஸ்ஐஆர் பணிகளில் திமுக அத்துமீறல் அதிகரித்துள்ளது” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
எஸ்ஐஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி) நடவடிக்கைகளில் திமுகவினர் தலையீடும் அத்துமீறலும் அதிகரித்து வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
இன்று (நவம்பர் 10) கோவை வ.உ.சி. மைதானத்தில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் ஒன்றிணைந்து பாடிய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை ஆண்டெங்கும் கொண்டாட பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது கட்சி சார்ந்த நிகழ்ச்சி அல்ல; இது தேசபக்தியை வெளிப்படுத்தும் தேசிய நிகழ்வாகும். ஆனால், தமிழ்நாடு அரசு இதனை மாநில அளவில் கொண்டாடவில்லை.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மாணவ, மாணவிகளுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’ பாட அனுமதி கேட்டோம். ஆனால் நிர்வாக காரணங்களை சுட்டிக்காட்டி மூன்று நாட்கள் கழித்தும் அனுமதி மறுக்கப்பட்டது. 150 மாணவர்கள் பாடும் நிகழ்வுக்கு என்ன பாதுகாப்பு பிரச்சனை இருக்க முடியும்?” என அவர் கேட்டார்.
அவர் மேலும் கூறினார்:
“திமுக அரசு தேசபக்தி உணர்வை வளர்க்கும் எந்த முயற்சியையும் தடுக்கிறது. தற்போது நடைபெறும் எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினர் நேரடியாக தலையிட்டு அதிகாரிகளை மிரட்டி, விண்ணப்பங்களை அவர்களது கட்சியினரின் மூலம் விநியோகிக்கின்றனர். இது தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும்.
எஸ்ஐஆர் பணி புதிதாக தொடங்கப்பட்ட ஒன்று அல்ல; ஏற்கனவே தமிழகத்தில் நடந்து முடிந்தது. அப்போது திமுக எதுவும் கூறவில்லை, ஆனால் இப்போது எதிர்ப்பது அரசின் திறமையின்மையை மறைக்க மட்டுமே. பீஹாரில் கூட இதுகுறித்து புகார் எதுவும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.”
திமுக மீது விமர்சனம் தொடர்ந்த அவர், “துணை முதல்வர் உதயநிதி புதிய கட்சிகள் தாஜ்மஹால் மாதிரி – தட்டினால் விழும் என்றார். ஆனால் திருப்பி தட்டினால் என்ன நடக்கும் என்பதையும் அவர் யோசிக்கட்டும். திமுக விரைவில் மாற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை,” என்றார்.
நடிகர் விஜயை பற்றியும் கருத்து தெரிவித்த அவர், “விஜய் திமுக-வை வீழ்த்தப் போவதாக கூறுகிறார். ஆனால் தனியாக எப்படி வீழ்த்த முடியும்? எந்தத் திட்டம் உள்ளது என்பதைத் தெரியவில்லை,” என்றார்.
மேலும், “கோவையில் சாலைகள் மோசமாக உள்ளன, அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் போதவில்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
பின்னர், கோவை புலியகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில் 11 நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூமிபூஜையில் வானதி சீனிவாசன், எம்எல்ஏ அம்மன் கே. அர்சுனன், முன்னாள் சுயாதீன இயக்குநர் சங்கீதா வாரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.