விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்!

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

2025-ம் ஆண்டில் இதுவரை ஷுப்மன் கில் 5 டெஸ்ட் சதங்களைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2017 மற்றும் 2018-ல் தலா 5 சதங்களை அடித்திருந்தார். இதன் மூலம் ஒரே ஆண்டில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.

கேப்டனாக 12 இன்னிங்ஸ்களில் 5 சதங்களை அடித்துள்ள ஷுப்மன் கில், இந்த சாதனையை மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் படைத்த சிலர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதில் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் (9 இன்னிங்ஸ்) மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (10 இன்னிங்ஸ்) முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். போட்டி கணக்கில் பார்க்கும்போது, ஷுப்மன் கிலும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனும் தலா 7 போட்டிகளில் கேப்டனாக 5 சதங்களை அடித்துள்ளனர். அலாஸ்டர் குக் இதையே 5 போட்டிகளில், கவாஸ்கர் 6 போட்டிகளில் செய்திருந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் அணியை குறைந்தது ஏழு முறை வழிநடத்தியவர்களில், அதிக சராசரி (Average) டான் பிராட்மேனுக்கே (101.51) சொந்தமானது. அவருக்கு அடுத்த இடத்தை 84.81 சராசரியுடன் ஷுப்மன் கில் பிடித்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 518 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதில் பை அல்லது லெக் பை என எந்த ரன்களும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் வரலாற்றில் இவ்வாறு பை அல்லது லெக் பை இன்றி அதிக ரன்கள் குவித்த சாதனையாகும் இது. இதற்கு முன்பு, 2018-ல் இலங்கை அணிக்கு எதிராக வங்கதேசம் 513 ரன்கள் எடுத்திருந்தது.

மேலும், இந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 318 பந்துகள் வீசியும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை. 300 பந்துகளுக்கு மேல் வீசி விக்கெட் எதுவும் எடுக்காதது டெஸ்ட் வரலாற்றில் இதுவே மூன்றாவது முறை. இதற்கு முன், 1972-ல் நியூஸிலாந்து (540 பந்துகள்) மற்றும் 2016-ல் பாகிஸ்தான் (432 பந்துகள்) அணிகளும் இதே நிலைமைக்கு உள்ளாகியிருந்தன.

Facebook Comments Box