சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் திறப்பு

சிஎம்டிஏ (சென்னை மெட்ரோப்பாலிட்டன் அபிவிருத்தி ஆணையம்) சார்பில் ரூ.53 கோடி செலவில், நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், வண்ண மீன் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கடை ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்கினார்.

சென்னை கொளத்தூர் பகுதி, நீண்ட காலமாக வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக திகழ்கிறது. இப்பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் இத்தொழில்மீது வாழ்வாதாரத்தை நம்பியுள்ளன. இதை மனதில் கொண்டு, 2021 ஜூன் 26 அன்று மீன் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன் பின்னர், 2021-22 நிதியாண்டு பட்ஜெட்டில், தமிழகத்தில் முதன்முறையாக உலகத் தரத்தில் வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சிஎம்டிஏ மற்றும் மீன்வளத்துறை இணைந்து, சென்னை வில்லிவாக்கம் – சிவசக்தி நகரில் இந்த மையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் நிகழ்த்தினார்.

மொத்தம் 15,945 சதுர மீட்டர் நிலப்பரப்பில், 11,650 சதுர மீட்டர் கட்டிடப் பரப்பில், ரூ.53 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மையம் தரைத் தளத்துடன் இரண்டு தளங்களில் அமைந்துள்ளது. இதில் 188 கடைகள் மற்றும் 5 உணவகங்கள் உள்ளன.

தரைத் தளத்தில் 64 கடைகள், அலுவலகம், உருளை வடிவ மீன் காட்சியகம் 2, ஆண்களுக்கு 16 மற்றும் பெண்களுக்கு 8 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

முதலாம் தளத்தில் 70 கடைகள், ஆண்களுக்கு 16, பெண்களுக்கு 8, மாற்றுத் திறனாளிகளுக்கு 2 கழிப்பறைகள் உள்ளன.

இரண்டாம் தளத்தில் 54 கடைகள், தேவையான கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 200 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 188 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே. சேகர்பாபு, சென்னை மேயர் ஆர். பிரியா, வீட்டு வசதி துறை செயலர் காகர்லா உஷா, மீன்வளத்துறை செயலர் நா. சுப்பையன், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலர் அ. சிவஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box