கிரிக்கெட் மைதானங்களில் பல ஆடுகளங்கள் ஏன் உள்ளன? – ஒரு விளக்கம்
அதிகப்படியான கிரிக்கெட் மைதானங்களில் ஒரே ஒரு ஆடுகளம் (பிட்ச்) மட்டும் இல்லாமல், அதன் அருகில் பல ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா?
ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது, அந்தப் போட்டிக்காகச் சிறப்பாக தயார் செய்யப்பட்ட பிரதான ஆடுகளத்தில் வீரர்கள் முன்கூட்டியே பயிற்சி செய்வதை அனுமதிப்பதில்லை. காரணம், ஒவ்வொரு ஆடுகளத்தையும் தயாரிக்க பல நாட்கள் தேவைப்படும்; மேலும் அதில் பயிற்சி செய்தால் அதன் மேற்பரப்பு சேதமடையும் அபாயம் அதிகம். இதனால் போட்டி அதிகாரிகள் முன்னதாக செய்த ஆய்வுகள், மதிப்பீடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும்.
ஆனால் வீரர்கள் வலைப் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் என்பதால், பிரதான ஆடுகளத்தின் அருகே உள்ள பிற ஆடுகளங்களில் அவர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். இதுவே மைதானங்களில் பல ஆடுகளங்கள் அமைக்கப்படுவதற்கான முக்கிய காரணம்.
மேலும், ஒவ்வொரு ஆடுகளத்தின் தன்மையும் சற்றே மாறுபட்டிருக்கும். இதனால் வீரர்கள் பல்வேறு வகையான பந்துகளில், வித்தியாசமான நிலைகளில் ரன்கள் எவ்வாறு சேர்க்கலாம் என்ற அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
சில சமயங்களில், போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஆடுகளம் மோசமான நிலைக்கு மாறி விளையாடுவதற்கு தகுதியற்றதாக இருந்தால், நடுவர்களின் அனுமதியுடன் – இரு அணிகளின் கேப்டன்கள் சம்மதித்தால் – மற்றொரு ஆடுகளத்தில் போட்டியைத் தொடர முடியும்.
மேலும், வானிலை பாதிப்புகள் அல்லது பிற வெளிப்புற காரணங்களால் பிரதான ஆடுகளத்தை பயன்படுத்த முடியாத நிலையிலும், மாற்று ஆடுகளங்கள் உதவியாக இருக்கும்.
இவ்வாறு, எந்த காரணத்தாலும் போட்டி இடையூறு அடையாமல் நடைபெறுவதற்காகவே மைதானங்களில் கூடுதலான ஆடுகளங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்படுகின்றன. அதேபோல், தொடர்ச்சியான போட்டிகளுக்காகவும் (series schedule) பல ஆடுகளங்கள் இருந்தால் வசதியாக இருக்கும்.