வாக்காளர்களுடன் தொடர்பு வைக்க வாட்ஸ்அப் குழுக்கள் — அதிமுக ஐடி விங் புதிய முயற்சி
தமிழகம் முழுவதும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், தங்கள் பகுதியில் உள்ள அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்கான உத்தரவை கட்சித் தலைமையே வழங்கியுள்ளது.
மொத்தம் 68,019 பூத்கள் கொண்ட தமிழகத்தில், ஒவ்வொரு பூத்திற்கும் 9 பேர் கொண்ட பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்கு அதிமுக மேலிட பார்வையாளர்கள் மற்றும் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இந்த வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சில பூத் நிர்வாகிகள் கூறுகையில்,
“சென்னையில் இருக்கும் பொதுச்செயலாளர் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் வகையில், அனைத்து பூத் கமிட்டி நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக, ஐடி விங் நிர்வாகிகள் பூத் நிர்வாகிகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து, பொதுச்செயலாளர் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்கள். சிலருக்கு இதற்கென தனிப் மொபைல் போன்களும் வழங்கப்பட்டுள்ளன.”
ஒரு பூத்தில் சராசரியாக 1,200 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் உள்ள 9 பேர், தங்களது பகுதியில் உள்ள அதிமுக ஆதரவாளர்கள், நடுநிலை வாக்காளர்கள், மற்றும் கட்சியினரைத் தேர்ந்தெடுத்து, பகுதி செயலாளரை அட்மினாகக் கொண்ட வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்த குழுக்களில்,
- அதிமுக தலைமை அனுப்பும் தகவல்கள்,
- வார்டு மற்றும் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள்,
- திமுக ஆட்சியின் குறைபாடுகள் போன்ற தகவல்கள் பகிரப்படும்.
தேர்தல் முடியும் வரை இந்த வாட்ஸ்அப் குழுக்களை செயல்பாட்டில் (ஆக்டிவாக) வைத்திருந்து, அதில் இணைந்திருக்கும் வாக்காளர்களுடன் பூத் நிர்வாகிகள் மற்றும் பகுதிச் செயலாளர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என தலைமை வழிகாட்டியுள்ளது.