எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவத்தில் குழப்பம் — முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக (எஸ்ஐஆர்) வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது:
“நமது தொடர் எதிர்ப்புகளையும் மீறி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கிவிட்டன. பலருக்கும் இதன் நோக்கம் இன்னும் சரியாக புரியவில்லை. நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதால், திருத்தப் பணியைத் திமுக எதிர்க்கவில்லை. ஆனால், போதுமான நேரம் வழங்காமல் அவசரமாக நடத்துவது சரியல்ல.” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“வாக்காளர் பட்டியல் மோசடி குறித்து ராகுல் காந்தி ஏற்கனவே விளக்கியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கின்றனர். நாமும் உடனடியாக இதை சதி என உணர்ந்து எதிர்த்தோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வரும் நவம்பர் 11 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.”
படிவத்திலுள்ள குழப்பங்களை எடுத்துரைத்த அவர்,
“படிவத்தில் உறவினர் பெயர் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் ‘உறவினர்’ என்றால் யார் — தந்தையா, தாயா, மனைவியா, மகனா — என எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஒரே விபரம் மூன்று முறை கேட்கப்பட்டுள்ளது. யாருடைய பெயரை எழுத வேண்டும் என்றே புரியவில்லை. சிறிய தவறே வாக்காளர் பெயரை நீக்கிவிடும் அபாயம் உள்ளது,” என்று கூறினார்.
புகைப்படம் ஒட்டுதல் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்:
“படிவத்தில் வாக்காளர் புகைப்படம் அச்சிட்டு ஒட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மாநில தேர்தல் அதிகாரி, விருப்பமிருந்தால் ஒட்டலாம் என கூறியுள்ளார். ஒட்டவில்லை என்றால் என்ன விளைவுகள் என்பதைப் பற்றிய தெளிவு இல்லை,” என்றார்.
மேலும்,
“இந்த பணிகளில் பங்கேற்கும் பிஎல்ஓக்கள் (போலிங் லெவல் ஆபிசர்கள்) பல இடங்களில் வருவதில்லை; வரினும் போதுமான படிவங்கள் இல்லாமல் வருகின்றனர். இவ்வாறு குறுகிய காலத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட படிவங்களைப் பூர்த்தி செய்வது சாத்தியமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதோடு,
“பிஎல்ஓக்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யாவிட்டால், பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும்,” என எச்சரித்தார்.
முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்ததாவது:
“திமுக இதை எதிர்க்கும் நோக்கில் உதவி மையம் அமைத்துள்ளது. இது திமுகவினருக்காக மட்டும் அல்ல, எல்லா பொதுமக்களுக்கும் திறந்த மையம். எஸ்ஐஆர் தொடர்பான எந்த சந்தேகத்திற்கும் 08065420020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.”
இறுதியாக அவர் கூறியதாவது:
“வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. தமிழ்நாட்டின் வாக்குரிமையை பறிக்க நினைக்கும் எந்த முயற்சியையும் மக்கள் ஒன்றிணைந்து எதிர்த்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்.”