தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதியின்றி பயணிகள் அவதி!
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையம், தென் ரயில்வேயின் மிகப் பரபரப்பான முனையமாக விளங்குகிறது. இங்கு 3வது முனையம் 2018 ஆம் ஆண்டு தொடங்கி செயல்படுகிறது.
தினசரி 220-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை–தாம்பரம் வழியாக இயங்குகின்றன. மேலும், செங்கல்பட்டு, திருமால்பூர் போன்ற புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் தாம்பரம் வழியாக செல்கின்றன. இதுதவிர, எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்கின்ற 30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் தாம்பரத்தில் நின்று செல்கின்றன.
தாம்பரம் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால், தினசரி 2.3 லட்சம் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். 2024–25 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.276 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
அத்தகைய வருவாய் ஈட்டும் நிலையமாக இருந்தும், தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் போதாமை குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் இல்லை
நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, பாண்டியன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் 7 மற்றும் 8வது நடைமேடைகள் வழியாக இயங்குகின்றன. ஆனால், இங்கு மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு வசதிகள் இல்லை. இதே நிலை 5 மற்றும் 6வது நடைமேடைகளிலும் காணப்படுகிறது.
இதனால், குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
குடிநீர், கழிவறை வசதியின்மையும் அவதி
மேலும், நடைமேடைகளில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லாமை காரணமாகவும் பயணிகள் அவதிப்படுகின்றனர். 6, 7, 8வது நடைமேடைகளுக்கு செல்ல பேட்டரி கார் வசதி இருப்பினும், அதற்கான கட்டணம் ஏழை பயணிகளுக்கு சுமையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
இதுகுறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறியதாவது:
“கடந்த ஆண்டில் மட்டும் 3.4 கோடி பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அடிப்படை வசதிகள் எதுவும் போதிய அளவில் இல்லை. 5 முதல் 10 வரை உள்ள நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி, ஓய்வு அறை, குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி வசதிகள் எதுவும் சரிவர இல்லை.”
அவர் மேலும்,
“தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்திற்கான விரிவான அறிக்கை 2020ஆம் ஆண்டு ஒப்பந்தமாக வழங்கப்பட்டது. ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டும், இன்னும் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்படவில்லை,”
என்று கூறினார்.
ரயில்வே பதில்
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை படிப்படியாக செய்து வருகிறோம். பார்க்கிங் வசதி நிலையத்தின் இருபுறங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகரும் படிக்கட்டுகள் தேவையான நடைமேடைகளில் விரைவில் பொருத்தப்படும். மறுசீரமைப்பு பணி தொடங்கும் போது அனைத்து வசதிகளும் முழுமையாக செய்து தரப்படும்.”