கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை – செந்தில்பாலாஜி தொடக்க விழா
கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவையை முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் தொகுதி எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி இன்று (அக். 19) தொடங்கி வைத்தார்.
கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மி. தங்கவேல் தலைமை வகித்தார். விழாவில் கரூர் மாநகராட்சி துணை மேயர் ப. சரவணன், மாநகராட்சி குழுத் தலைவர்கள் எஸ்.பி. கனகராஜ், ஆர்எஸ். ராஜா, சக்திவேல், மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, போக்குவரத்து கழக துணை மேலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய தாழ்தள பேருந்துகளில், கரூர்–குளித்தலை மற்றும் கரூர்–பாளையம் வழித்தடங்களில் தலா 2 பேருந்துகள், கரூர்–வேலூர் வழித்தடத்தில் 1 பேருந்து இயக்கப்படுகிறது.
செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதில், “இந்த புதிய தாழ்தள பேருந்துகள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. மக்கள் பெருமையாகக் குறிப்பிடக்கூடிய அளவுக்கு, அனைத்து நவீன வசதிகளுடனும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “முதல்வர் திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கி வருகிறார். ஆனால் சிலர் கரூர் மக்களுக்கு நன்மை கிடைக்காதபடி நீதிமன்றம் மூலம் தடையாணை பெற முயல்கின்றனர். இருந்தாலும் அரசு சட்டரீதியாக போராடி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. திருவள்ளுவர் மைதானத்தில் ரூ.7 கோடி மதிப்பில் மாவட்ட மைய நூலகம் கட்டும் பணியும் அதேபோல தடையாணை பிறகு தொடங்கப்பட்டது,” என்றார்.
அவரது பேச்சில், வருங்காலத்தில் கரூர் மாவட்ட மக்களுக்கு மேலும் பல சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.