நாயகனாக மாறும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்?
தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீபிரசாத், விரைவில் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் **‘எல்லம்மா’**வில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் பரவியுள்ளது. இந்த படத்தின் நாயகனாக நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் எந்த ஒருவருடனும் ஒப்பந்தம் உறுதியாவதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இந்தப் புதிய பாத்திரத்திற்காக அவர் உடல் அமைப்பை மாற்றி வருவதாகவும், கதையின் தேவைபடி தனது தோற்றத்திலும் மாற்றம் செய்யப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘பாலகம்’ என்ற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வேணு எல்டண்டி, தற்போது தில் ராஜு தயாரிக்கும் இந்த புதிய படத்திற்குத் தயாராகி வருகிறார்.
தனது இசையால் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் தனித்த அடையாளம் பெற்ற தேவி ஸ்ரீபிரசாத், இதற்கு முன்பு பல பேட்டிகளில் “நடிப்பில் ஆர்வமுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
தமிழில் ‘சச்சின்’, ‘மாயாவி’, ‘ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்ததுடன், தெலுங்கில் ‘புஷ்பா’, ‘ஆர்யா’, ‘மிர்சி’, ‘ஸ்ரீமந்துடு’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வெற்றியைப் பெற்றவர் அவர்.
இப்போது அவர் ஹீரோவாக களமிறங்குவதாகும் செய்தி, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.