2005-ல் வெள்ளக்கோவில் கல்லமடை மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் தேமுதிக சார்பில், விஜயகாந்த் நற்பணி மன்றம் மூலம் மொத்தம் 3 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, வீட்டு மனைகளாகப் பிரித்து பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. அப்போது 75 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு, 33 பேருக்கு முதலில் வழங்கப்பட்டாலும், மீதமிருந்த 1 ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை.
பின்னர், தேமுதிக மாவட்டத் தலைவர் சந்திரகுமார் திமுகவில் சேர்ந்து, தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் பவர் ஆவணத்தை ரத்து செய்து, 1 ஏக்கர் நிலத்தை தனக்காக விற்க முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி தேமுதிக காங்கயம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி விசாரித்து, 3 ஏக்கர் நிலமும் தேமுதிகவுக்கே சொந்தமாகும் எனக் கூறி, அதை உரிய முறையில் திரும்ப வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.இளங்கோவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நிலத்தைப் பார்வையிட்டு, தற்போதைய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் விவரம் தெரிவித்தனர். மீட்கப்பட்ட நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனக் கட்சியினர் தெரிவித்தனர்.