புதுச்சேரியில் எஸ்ஐஆர் நடைமுறைகளில் குற்றப்புணர்ச்சி – அதிமுக குற்றச்சாட்டு
புதுச்சேரி தேர்தல் துறை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறி செயல்படுகிறது என்று அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“தெருநாய்கள் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை உடனடியாக அமல்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய திமுக–காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டதுடன், மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றதாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவும், எம்.பி வைத்திலிங்கமும் ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே துணைநிலை ஆளுநர் விசாரணைக் குழு அமைத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
அவர் மேலும் கூறியதாவது:
“சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்திருந்த நிதி உதவித் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500வும், மஞ்சள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1,000வும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.500 உயர்வும் அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்ற மாதம் ரூ.30 கோடி, ஆண்டுக்கு ரூ.360 கோடி தேவைப்படும். தற்போதைய பட்ஜெட் திருத்தப் பணியின் போது இதற்கான நிதியை ஒதுக்கி, டிசம்பர் மாதம் முதல் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
“புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்குள்ள கடைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி புதிய ஏலத்தின் அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அண்ணா திடலில் புதிய கடைகள் கட்டப்பட்டபோது, பழைய கடை வைத்திருந்தவர்களுக்கே ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுபோலவே பேருந்து நிலையத்திலும் பாதி கடைகளை பழையவர்களுக்கு, மீதியை ஏலத்தின் மூலம் ஒதுக்கலாம்,” என்றார்.
மேலும், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்களை மீட்க புதுச்சேரி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, தேர்தல் துறை செயல்பாடுகள் குறித்து அவர் கூறியதாவது:
“தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை மீறுகிறது. வீடு தோறும் சென்று வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்களின் படிவங்களை அண்டை வீட்டாரிடம் கொடுத்து செல்கின்றனர். பின்னர், அந்தப் படிவங்கள் தவறான தகவல்களுடன் பூர்த்தி செய்யப்படும் அபாயம் உள்ளது. இதற்கான ஆதாரங்களுடன் அதிமுக சார்பில் புகார் அளிக்க உள்ளோம்,” என்றார்.