பாகிஸ்தான்–ஆப்கன் பேச்சு தோல்வி: “போருக்கு தயார்” – தலிபான் எச்சரிக்கை
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இன்றி முடிவடைந்த நிலையில், “போருக்கு தயாராக உள்ளோம்” என்று ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு எச்சரித்துள்ளது.
தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்ததாவது:
“துருக்கி மற்றும் கத்தார் நடுவழியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நாங்கள் நம்பிக்கையுடன் பங்கேற்றோம். ஆனால், பாகிஸ்தான் பொறுப்பற்ற அணுகுமுறையைக் கொண்டது. அனைத்து பழியையும் எங்கள்மீது சுமத்துகிறது.
பாதுகாப்பு தொடர்பான பாகிஸ்தானின் கோரிக்கைகள் அர்த்தமற்றவை. எங்கள் நிலத்தில் மற்ற நாடுகளுக்கெதிரான நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். போர் எங்கள் விருப்பமல்ல, ஆனால் தேவைப்பட்டால் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.”
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது:
“பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. எங்கள் குழு நாடு திரும்புகிறது. எதிர்காலத்தில் இத்தகைய கூட்டம் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது. எல்லை பகுதியில் தலிபான் போர்நிறுத்தத்தை மீறாத வரை அது தொடரும்.”
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான 2,640 கி.மீ. எல்லை பகுதியில் கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த அக்டோபர் 19 முதல் கத்தார் நாட்டின் சமரசத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், எல்லைப் பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.