சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்டோ பறிமுதல் எச்சரிக்கை!
சென்னையில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிங்க் ஆட்டோ சேவையை ஆண்கள் ஓட்டினால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யும் வகையில், ஜிபிஎஸ் கருவி மற்றும் பெண்களுக்கான உதவி எண் பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 லட்சம் மானியம் மற்றும் வங்கிக் கடனுதவியுடன் கடந்த மார்ச் 8-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆனால் சமீபத்தில், சில இடங்களில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சமூக நலத்துறையின் ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, பிங்க் ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை மீறி ஆண்கள் இயக்குவது கண்டறியப்பட்டால், வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.