நேரடி நெல் கொள்முதலில் திமுக நாடகம் – விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதலில் தாமதம் மற்றும் குளறுபடிகள் காரணமாக, விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இதனால் அவர்களுக்கு “கண்ணீர் தீபாவளி” ஆனது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நெல் கொள்முதலில் திமுக அரசு மீண்டும் மீண்டும் நாடகம் ஆடுகிறது. மோசமான நிர்வாகத்தால், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதற்கு முழுப்பொறுப்பு ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கே உண்டு,” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “அஇஅதிமுக ஆட்சியில் தினசரி 1000 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டன. ஈரப்பத அளவு 22 சதவீதம் வரை உயர்த்தி, மத்திய அரசின் அனுமதியுடன் நெல் வாங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் ஒரு நாளுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. சாக்குப் பைகள், தார்ப்பாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதுமானதாக இல்லை,” என்றார்.
மேலும், “மழையால் நெல்மணிகள் முளைத்து வீணாகின்றன. கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமை, உரத்தட்டுப்பாடு, கடன் சிக்கல் போன்ற பிரச்சினைகளால் விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர். இப்போது உடனடியாக 22 சதவீத ஈரப்பத நெலையும், தினசரி 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
அவர் மேலும் எச்சரித்ததாவது, “விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்தால், மாநிலம் முழுவதும் மாபெரும் விவசாயிகள் போராட்டத்தை சந்திக்க திமுக அரசு தயாராக இருக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.