நவம்பர் 12-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் நவம்பர் 12-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகத்தின் மேல் கீழடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதாலும், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 12-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுடன் புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.