திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு கோரி வழக்கு – உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசன முன்பதிவு முறையை அறிமுகப்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் விளக்கம் கோரியுள்ளது.
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாக்கல் செய்த மனுவில், திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்கள் 5 முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும், அங்கு மேற்கூரை, குடிநீர், அமர்வு இடம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், முதியோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனை தீர்க்க, ஆன்லைன் மூலம் முன்பதிவு (Online Booking) செய்யும் வசதி, குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் பெற டோக்கன் முறை, மேலும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு கவுன்டர்கள் மற்றும் தனி பாதை போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அவர் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் தலைமையிலான அமர்வு, மனு தொடர்பாக இந்துச் சமய அறநிலையத் துறை ஆணையர், திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டது.