“சினிமா புகழால் மாய பிம்பம்…” – விஜயை மறைமுகமாக தாக்கிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் தளிஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியபோது, தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.
“மக்களை நேரில் சந்திக்காமல், சினிமா புகழை மட்டுமே நம்பி ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதாக மாய பிம்பம் உருவாக்கியுள்ளனர்,”
என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:
“2026 சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியமானது. இதுவரை அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கிடையேதான் நேரடி போட்டி இருந்து வந்தது. ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மறைந்துள்ள நிலையில் புதிய கட்சிகள் உருவாகி மாய பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. அவர்கள் மக்களைச் சந்திக்கவில்லை, நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை, சினிமா புகழை நம்பி தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் நாம் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்.”
தவெக தலைவர் விஜய் சமீபத்தில் “2026 தேர்தலில் தவெகவும் திமுகவும் நேரடி போட்டியாளர்கள்” என கூறியிருந்த நிலையில், கே.பி.முனுசாமியின் இந்தக் கருத்து விஜயை நோக்கிய மறைமுக தாக்குதலாக பார்க்கப்படுகிறது.