புத்தகரம் கோயில் தேரோட்டம் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாகவே நடத்த உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள புத்தகரம் அருள்மிகு முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டத்தை, பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி வழியாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் விசாரிக்கப்பட்டது.
மனுதாரர் தனது மனுவில்,
“பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தீபாராதனையின் போது கோயிலுக்கு வெளியிலிருந்தே மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. தேரோட்டம் மற்றும் வெள்ளோட்டத்தின் போது கூட காலனி வழியாக தேர் வராமல் தடுக்கப்படுகிறது,”
என்று கூறியிருந்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில்,
“பாகுபாடு ஏதும் காட்டப்படவில்லை; சாலை வசதி குறைபாடு காரணமாகவே தேரோட்டம் மாற்றப்பட்டது,”
என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம், மனுதாரர் உள்ளிட்ட அனைவரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்து, தேரின் வழித்தடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இறுதி உத்தரவாக, நீதிபதி பி.பி. பாலாஜி,
“முத்து கொளக்கி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. எவரிடமும் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அரசு இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்,”
என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆஜராகி,
“தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இதற்குப் பொறுப்பேற்று குடிமக்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும்,”
என வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவின் படி, காலனி வழியாகவே கோயில் தேரோட்டம் மற்றும் வெள்ளோட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.