‘எஸ்எம்எஸ் வருது… ரேஷன் வரலை!’ – தாயுமானவர் திட்டம் குறித்த புகாரும் விளக்கமும்
முதல்வரின் ‘தாயுமானவர் திட்டம்’ மூலம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கிய சில வாரங்களிலேயே புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கி வைத்த இந்தத் திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்கள் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. திட்டத்தின் படி, தகுதியுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் தற்போது 70,311 பயனாளிகள் — அதாவது மாற்றுத் திறனாளிகள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் — இத்திட்டத்தின் கீழ் உள்ளனர். மேலும், சமீபத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் சேர்த்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளுக்கே சென்று மின்னணு தராசு மூலம் எடை போட்டு பொருட்களை வழங்க வேண்டும் என்பது நடைமுறை.
ஆனால், திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள் அதிகரித்து வருவதாகவும், அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரைச் சேர்ந்த ஒரு மூத்த குடிமகன் கூறுகையில்,
“எனக்கு 75 வயது, மனைவிக்கு 67. எங்களுக்கு குறுந்தகவல் வந்தது — ஆனால் பொருட்கள் வரவில்லை. நாங்களே ரேஷன் கடைக்குச் சென்று வாங்க வேண்டிய நிலை. இதற்கு தேர்தல் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் வருகிறது. அதிகாரிகள் 60 வயதுக்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்தால் எப்படி? இப்படிச் சட்டங்கள் வைத்தால் திட்டத்தின் நோக்கம் பூர்த்தி ஆகாது,” என்றார்.
இதை அடுத்து, மூத்த குடிமக்களும் மாற்றுத் திறனாளிகளும், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அரசின் நோக்கம் நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் சதீஷ் இதுகுறித்து கூறுகையில்,
“65 வயதுக்கு மேற்பட்ட முதியோரும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 86,500 பேர் இதன் மூலம் பயனடைகின்றனர். அனைத்து விவரங்களும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் தரவுகளில் இருந்து பெறப்பட்டவை. இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இத்திட்டம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது; இதுவரை எந்தப் புகாரும் பெறப்படவில்லை. புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.