பும்ராவின் பயன்பாட்டில் உள்ள குழப்பம் – அஜய் ஜடேஜா தாக்கல்

“ஒருபுறம் இங்கிலாந்து போன்ற முக்கியமான டெஸ்ட் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்கிறார் என்பது ‘பணிச்சுமை காரணம்’ என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதே சமயம் பெரிதாக முக்கியமில்லாத ஆசியக் கோப்பை போன்ற போட்டிகளில் பும்ராவை களமிறக்குவது… இது எப்படி நியாயம்?” என அஜய் ஜடேஜா, இர்பான் பதான் இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சோனி ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேசிய ஜடேஜா, “இப்போது பும்ராவை ஆட வைக்க வேண்டிய அவசியம் என்ன? சாதாரணமாக அவர் பெஞ்சில் இருந்தாலும், அவரை பாதுகாப்பதே வழக்கம். ஆனால், இப்போது அவசியமற்ற போட்டிகளில் பும்ராவை விளையாட வைக்கிறார்கள். யுஏஇ அணிக்கெதிராக கூட பும்ரா தேவைப்படுவார் போல இருக்கிறது. ஒரே இரண்டு வழிகள் தான் – அவரை சரியாகப் பாதுகாப்பது அல்லது இப்படி அசட்டு போட்டிகளில் ஆடவைக்காமல் இருப்பது. அதுதான் தர்க்கம். ஆனால் நம்மிடம் தர்க்கப்படி செய்யும் பழக்கம் இல்லை. அதனால்தான் இப்படி நடக்கிறது” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், “பும்ரா இன்று ஆடினால் நானும் ஸ்ட்ரைக் செய்யப் போகிறேன்” என்றார்.

இதற்குத் துணை நின்று பேசிய இர்பான் பதான், “பும்ராவை பாதுகாக்க வேண்டியது சரி, அதற்கு ஒப்புக்கொள்கிறேன். இதே விஷயத்தை இங்கிலாந்து தொடரிலும் சொன்னேன். ஒரு தொடருக்கு வந்தால் முழுமையாகவே ஆட வேண்டும். ஒரு தொடரில் ஓய்வு எடுக்கவோ, உடலை சீர்படுத்தவோ வருவதில்லை. ஆடத்தான் வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல், எதிரணி அணியின் வலிமையை வைத்து பும்ராவை விளையாட வைக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு போட்டியில் பும்ரா, அர்ஷ்தீப், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ஷிவம் டுபே என ஆடினால் – அடுத்த போட்டியிலும் அதே ஆற்றலைத் தொடர வேண்டும். ஆனால் திடீரென ‘பும்ரா ஓய்வு’ என்று சொன்னால், அதனால் குல்தீப் யாதவுக்கு இடமே கிடைக்காது” என்றார்.

14 மாத இடைவெளிக்குப் பிறகு பும்ரா டி20 போட்டிகளில் மீண்டும் களம் காண்கிறார். பார்டர்–கவாஸ்கர் கோப்பைக்குப் பிறகு ‘பணிச்சுமை’ காரணமாக ஏற்பட்ட ஸ்ட்ரெஸ் பிராக்ச்சர் காரணமாக ஓய்வெடுத்திருந்தார். துபாய் ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபியிலும் பும்ரா பங்கேற்கவில்லை. இப்போது, இங்கிலாந்து தொடரில் 3 டெஸ்ட்கள் ஆடிய பிறகு மீண்டும் டி20-க்குத் திரும்பியுள்ளார்.

பொதுவாக பும்ராவைச் சுற்றிய முடிவுகள் குறித்து அணித் தேர்வுக் குழுவிற்கு தெளிவான பார்வை இல்லையே என்பது, ஜடேஜா மற்றும் பதான் இருவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டாகும்.

Facebook Comments Box