முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. இதில், செதிகுல்லா அடல் 45 பந்துகளில் 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடித்து 64 ரன்களும், இப்ராகிம் ஸத்ரன் 45 பந்துகளில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் சேர்த்து 65 ரன்களும் எடுத்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் பஹீம் அஸ்ரப் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
170 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, முழு 20 ஓவர்களிலும் 9 விக்கெட்கள் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ஹாரிஸ் ரவூப் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். பஹர் ஸமான் 25 ரன்களும், கேப்டன் சல்மான் ஆகா 20 ரன்களும் சேர்த்தனர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இப்ராகிம் ஸத்ரன் ‘ஆட்ட நாயகன்’ விருதைப் பெற்றார்.