மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி ஜாய் கிரிஸில்டா மனு – காவல்துறைக்கு 12 வரை அவகாசம்
சென்னை:
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி (CBCID) பிரிவுக்கு மாற்ற வேண்டும் என ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்க காவல் துறைக்கு நவம்பர் 12 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
கோவைச் சேர்ந்த சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றியதாகவும், இரண்டாவது திருமணம் செய்து கர்ப்பமாக்கியதாகவும், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,
“எனது புகாரில் மோசடி, மிரட்டல், கொடுமைப்படுத்தல், கருச்சிதைவை ஏற்படுத்தல், மின்னணு பதிவுகளை அழித்தல் போன்ற பிரிவுகள் இருந்தபோதிலும், காவல் துறை அவைபடி வழக்கு பதிவு செய்யவில்லை. காவல் துறையின் விசாரணை மெத்தனமாகவும் பாரபட்சமாகவும் உள்ளது. ரங்கராஜ் பிரபலமானவர் என்பதால் அதிகாரிகள் அவருக்கு ஆதரவாக நடந்து வருகின்றனர். எனவே விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்,”
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அவர்களின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பு பதிலளிக்க அவகாசம் கேட்டது. நீதிமன்றம் அதை ஏற்று, வழக்கு விசாரணையை நவம்பர் 12-ஆம் தேதி வரை ஒத்திவைத்தது.